Sunday, May 11, 2008

Nomophobia...

உங்களுக்கு இருக்கிறதா 'நோமொ போபியா?'


'நோமொ போபியா' (Nomophobia) என்று ஒரு வியாதி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? நமது நவீன வாழ்க்கை கொண்டுவந்து சேர்த்திருக்கும் எண்ணற்ற கேடுகளில் ஒன்றுதான் இந்த 'நோமொ போபியா'. அதாவது, 'நோ மொபைல் போபியா!' உங்கள் மொபைல் போனில் பேட்டரி தீர்ந்துவிட்டது அல்லது சிக்னல் கிடைக்காத இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்... அல்லது உங்கள் மொபைலை எங்கோ மறதியாக வைத்துவிட்டீர்கள்... இப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு பதற்றம் அதிகரிக்கிறதா? நிச்சயமாக உங்களுக்கு 'நோமொ போபியா' வந்திருக் கிறது என்று அர்த்தம்.

இங்கிலாந்து நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் அங்கு சுமார் ஒன்றரை கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில், ஆண்கள் 58 சதவிகிதம் பேரும், பெண்கள் 48 சதவிகிதம் பேரும் இந்த நோய்க்கு ஆட்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மொபைல் போன் தொடர்பு இல்லாவிட்டால் உலகமே தலைகீழாகிவிடும் என்ற நினைப்பு பலருக்கும் இருக்கிறது. முக்கியமான பல கூட்டங்களின் இடையேகூட மொபைல் ரீங்கரித்து நம்மை எரிச்சலடைய வைப்பது சகஜமாகிவிட்டது. எவ்வளவுதான் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாலும் மொபைலை 'ஸ்விட்ச் ஆப்' செய்ய பலரும் முன்வருவதில்லை. அதற்குக் காரணம் அவர்களைப் பீடித்திருக்கும் இந்த வியாதிதான். பாத்ரூமுக்குப் போனால் மொபைல் போனில் ரிங்டோன் கேட்பது போன்ற பிரமை உங்களுக்கு ஏற்படுகிறதா? அப்படியிருந்தால் நல்லதொரு டாக்டராகப் பார்த்து பரிசோதித்துக்கொள்வது உத்தமத்திலும் உத்தமம்.

நம்முடைய இளைஞர்களுக்கு அமெரிக்காவுக்குப் போக வேண்டும் என்பது வாழ்வின் லட்சியம். சில 'தேச பக்தர்கள்' இருக்கிறார்கள்... அவர்களுக்கோ அமெரிக்காவை நாம் மிஞ்சவேண்டும் என்பதுதான் லட்சியம். அப்படியான தேசபக்த அன்பர்கள் ஸ்வீட் கொடுத்து கொண்டாடக்கூடிய ஒரு செய்தி இப்போது வெளியாகியிருக்கிறது. மொபைல் போன் பயன்பாட்டில் இந்தியா இப்போது அமெரிக்காவை விஞ்சிவிட்டது. மொபைல் போன் பயன்பாட்டில் நாம் உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கிறோம். முதல் இடத்தில் இருப்பது சீனா!

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான 'ட்ராய்' (Telephone Regulatory Authority of India) வெளியிட்டிருக்கும் தகவலின்படி, கடந்த மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இருபத்தாறு கோடியே பதினோரு லட்சம். அதே காலத்தில் அமெரிக்காவிலோ, அது இருபத்தைந்து கோடியே எழுபத்தொன்பது லட்சம். மக்கள் தொகையில் முந்தியிருப்பதுபோலவே அமெரிக்காவை இதிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா 'முன்னேறி' விட்டது! இங்கே மாதத்துக்கு ஒரு கோடி பேருக்கு மேல் புதிதாக மொபைல் போன் இணைப்புப் பெறுகிறார்கள். அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்காகவே இப்போது பல்வேறு சலுகைகளை மொபைல் போன் கம்பெனிகள் அறிவித்து வருகின்றன. இந்த எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க 'நோமொ போபியா' நோயாளிகளும் அதிகரிக்கவே செய்வார்கள்.

செல்போனை அதிகம் பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்று அவ்வப்போது



சில செய்திகள் வெளியாகி நம்மை பயமுறுத்துவதுண்டு. அப்படியான செய்திகளை உலக சுகாதார நிறுவனம் (WHO) மறுத்தே வந்திருக்கிறது. ஆனால், இப்போது தெளிவான ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது. 'பிஎம்சி ஜெனோமிக்ஸ்' என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையன்று மொபைல் போன் பயன்படுத்துகிற கோடிக்கணக்கான மக்களை 'கிலி' கொள்ள வைப்பதாக இருக்கிறது. பின்லாந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளை அந்தக் கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்கள்.

மொபைல் போனிலிருந்து வெளிப் படும் கதிரியக்கத்தால் மனிதர்களின் செல்களில் மாற்றம் ஏற்படுகிறது என்பதை அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட நான்கு விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். பத்து பெண்களிடம் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. குறிப்பிட்ட கால அளவுக்கு கையின் மேற்பகுதியை மொபைல் போனின் கதிரியக்கம் படும்படியாக வைத்து சோதித்துப் பார்த்தனர். அதன்பிறகு, அந்த இடத்திலிருந்தும் கதிரியக்கம் படாத இடத்திலிருந்தும் சாம்பிள்களை எடுத்து ஆராய்ந்து பார்த்தபோது மொபைல் போனின் கதிரியக்கம் பட்ட இடத்தில் செல்கள் மாற்றத்துக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. அனு கரினென், சிர்பா ஹெய்னவாரா, ரீட்டா நைலுண்ட், தாரியஸ் லெசின்ஸ்கி ஆகிய நான்கு பேருமாகச் சேர்ந்து வெளியிட்டுள்ள இந்த ஆராய்ச்சி முடிவு, செல்போன் வெளிப்படுத்தும் கதிரியக்கம் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதை முதன்முதலாக உறுதிப்படுத்தியிருக்கிறது.

'மனித உடலின் திசுவில் இருக்கும் ரசாயன சேர்க்கையை உடைப்பதற்கு தேவைப்படும் ஆற்றலைவிட செல்போன் வெளிப்படுத்தும் கதிரியக்க ஆற்றல் குறைவாக இருக்கிறது. எனவே, அதனால் மனிதர்களுக்கு தீங்கு நேராது' என்று இதுவரை நம் விஞ்ஞானிகள் நமக்கு ஊட்டி வந்த தைரியம் இப்போது கேள்விக்குறி ஆகியுள்ளது!

ஆனால், மொபைல் போன்கள் உடலில் உண்டாக்கும் விளைவுகள் குறித்து ஒருபக்கம் சந்தேகமும் இருந்தே வந்தது. அதனால்தான், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிலவற்றை எடுக்கும்படி உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தியிருந்தது. இதுபற்றி 'செல்லும் கொல்லும்?' என்ற தலைப்பில் கடந்த ஆண்டே நான் ஜூ.வி-யில் எழுதியிருந்தேன்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் அடிப்படை யில், நம்முடைய நாட்டின் டெலிகம்யூனிகேஷன் துறைக்கு உட்பட்ட 'டெலிகம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் சென்டர்' (TEC) வகுத்தளித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் இதுவரை இங்கே நடைமுறைக்கு வரவில்லை. குறிப்பாக, 'மேக்ரோ ஆன்டெனா' என அழைக்கப்படும் செல்போன் டவர்களை எங்கெங்கே அமைக்கக்கூடாது என அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இங்குள்ள தனியார் மொபைல் நிறுவனங்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் மனம்போன போக்கில் டவர்களை அமைத்துக் கொண்டிருக்கின்றன.

மொபைல் போனால் ஏற்படும் ஆபத்துகள் இந்த அளவுக்கு வெளியே தெரிவதற்கு முன்பே 2004-ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஏ.கே.பிஸ்வாஸ் என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார். 'ரேடியோ கதிர்வீச்சால் புற்றுநோய், தூக்கமின்மை, மறதி முதலியவை ஏற்படும். ஆண்மைக் குறைவும் வரலாம். எனவே, குடியிருப்புப் பகுதிகளில் மொபைல் போன் டவர்களை அமைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும்' என்று அவர் கோரினார். இந்த விஷயத்தில், மனுதாரர் போதிய ஆராய்ச்சியை மேற்கொள்ளவில்லை எனக் காரணம் காட்டி, அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர். அதே மனு இப்போது தாக்கல் செய்யப்பட்டால் நிச்சயம் நீதிபதிகள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், அந்த அளவுக்கு இப்போது இந்த விஷயத்தில் ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.

மனித உடலில் இருக்கும் செல்லின் மீது மொபைல் போன் கதிரியக்கத்தால் ஏற்படும் மாற்றம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விஞ்ஞானிகள் மேலும் ஆழமாக ஆராய்ந்து வருகிறார்கள். இந்தக் கதிரியக்கத்தால் மனித செல்கள் சுருங்கிவிடக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர். மொபைல் போனை நீண்டநேரம் பயன்படுத்துவதால் அது உஷ்ணமடைந்து காதில் அந்த வெப்பம் தாக்குவதால் மூளையில் பாதிப்பு நேரலாம் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால், உஷ்ணத்தினால் மாத்திரமல்லாமல், மேலும் சில காரணங்களாலும் பாதிப்புகள் வரலாம் என்று இப்போது விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

டாக்டர் வினி குரானா என்ற நரம்பியல் நிபுணர் தெரிவித்துள்ள தகவல் மேலும் நம்மை அதிரவைக்கிறது. பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக மொபைல் போனைப் பயன்படுத்துபவர்களுக்கு 'ப்ரெய்ன் ட்யூமர்' வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார். செல்போன் பயன்பாடு பற்றி வெளிவந்துள்ள நூற்றுக்கும் அதிகமான ஆய்வேடுகளை ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு அவர் தன்னுடைய முடிவை வெளியிட்டுள்ளார். புகையிலையைவிட அதிகமான ஆபத்து மொபைல் போனில் வரப்போகிறது என்று கூறும் அவர், 'சில வகையான மூளைப் புற்று நோய்களுக்கும் செல்போன் பயன்பாட்டுக்கும் தொடர்பிருக்கிறது' என்று தெரிவித்துள்ளார். இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் இது குறித்த ஆராய்ச்சிகள் அடுத்தடுத்த கட்டங்களை அடையும். அப்போது மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகக்கூடும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். மூளை புற்றுநோயை ஆராய்வதற்கு பத்துப் பதினைந்து ஆண்டுகள் ஆகும். எனவே, மொபைல் போன் பயன்பாடு இங்கே என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் தொழில் செய்துவரும் அயல்நாட்டு மொபைல் நிறுவனங்கள் இங்கே எவ்வித பாதுகாப்பு நெறிகளையும் பின்பற்றுவதில்லை. ஆனால், அயல் நாடுகளில் அவை எல்லாவிதமான முன்னெச்சரிக்கை நடைமுறைகளையும் கடைப்பிடித்தே வருகின்றன. மத்திய அரசு அவற்றை வரைமுறைப்படுத்த உடனடியாக நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

மொபைல் போனை காதருகில் வைத்துப் பேசுவது ஆபத்தானது என்பது ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதற்காக சில நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும். 'ஹெட் போன்' மூலமாக மட்டுமே பேசக்கூடிய வகையில் இனி மொபைல் போன்களைத் தயாரிப் பதற்கு அரசு உத்தரவிட வேண்டும்.

மொபைல் போன் பயன்பாட்டில் முன்னணி பங்கு வகித்துவரும் நம்முடைய நாட்டில் அதன் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் நடைபெறாதது வருத்தமளிக்கிறது. இதற்கான பிரத்யேக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறு நம்முடைய விஞ்ஞானிகளிடம் இந்திய அரசு அறிவுறுத்தவேண்டும்.

பள்ளிகளில் மொபைல் போனுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துத் தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. எனவே, அதைக் கறாராக நடைமுறைப்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர், மாணவர் அடங்கிய கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்தவேண்டும். பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு குறித்துப் பேசும்போது இந்த மொபைல் போன்களால் வரும் கேடுகளைப் பற்றியும் பேசுவது நல்லது.

பள்ளிகளில் மட்டுமல்லாது கல்லூரிகளிலும் மொபைல் போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசு யோசிக்கலாம். முதலில் மாணவர்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்திப் பிறகு அவர்களே விரும்பி இதை ஏற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கலாம். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் மூவரில் ஒருவரிடம் மொபைல் போன் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அப்படியானால், இதன் பாதிப்புக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்யும். இதற்கான மருத்துவ வசதிகளை அரசே செய்து தரவேண்டுமென்றால் பல்லாயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்தாக வேண்டும். அது நடக்கப்போவதில்லை. எனவே, மொபைல் போன் பாதிப்புகளால் வரும் சுகாதாரக் கேடுகளை சமாளிப்பதற்கான நிதியை மொபைல் கம்பெனிகளிடமிருந்தே வசூலிக்கலாம். நம்முடைய உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கிற அந்த நிறுவனங்களே அதற்கான செலவுப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்பது நியாயமானதுதான்.

இந்தியாவெங்கும் எந்தவித வரைமுறையும் இல்லாமல் கண்டபடி அமைக்கப்பட்டிருக்கும் மொபைல் போன் டவர்களை டெலிகம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் சென்டர் வகுத்தளித்திருக்கும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு, குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் முதலானவை இல்லாத இடமாகப் பார்த்து அமைக்கும்படி அரசு உத்தரவிட வேண்டும். இதற்கு ஒரு கால நிர்ணயம் செய்து அதற்குள் இப்போதிருக்கும் டவர்களை மாற்றியமைக்குமாறு அரசு வலியுறுத்தவேண்டும்.

மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசாவை அண்மையில் சந்தித்தபோது அவரிடம் இந்தக் கோரிக்கைகளை நான் எடுத்துச் சொன்னேன். பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்தார். மத்திய தொலை தொடர்புத்துறையின் சார்பில் இருபதாயிரத்துக்கும் அதிகமான மொபைல் போன் டவர்கள் புதிதாக அமைக்கப்படுமென்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய டவர்களை முறையாக நிறுவ வேண்டியது அவசியமாகும்.

எந்தவொரு தொழில்நுட்பமும் கூடவே சில ஆபத்துகளையும் அழைத்து வருகிறது என்பது உண்மைதான். அதற்காக தொழில்நுட்ப வசதிகளே தேவையில்லை என்று நாம் கதவை அடைத்துக் கொண்டுவிட முடியாது. அதிகப்படியான மக்கள் பயன்படுத்துகிற தொழில்நுட்ப வசதிகளை அனுமதிக்கும்போது கூடுதல் எச்சரிக்கை நமக்குத் தேவை. இதில் அரசாங்கங்களின் பங்கு மிக அதிகம். இப்படியான விஷயங்களில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.

அரசு எடுக்கும் நடவடிக்கைக்குக் காத்திராமல் நாம் இப்போதே ஆரம்பிப்போம். ஒரு நாளில் சில மணி நேரங்களாவது நம்முடைய மொபைல் போனை 'ஸ்விட்ச் ஆப்' செய்வது; கட்டாயம் ஹெட்செட் மாட்டியே பேசுவது போன்ற வழிமுறைகளை வைத்தாவது கவலையின் அளவைக் குறைத்துக் கொள்வோம்!
NANDRI
ரவிக்குமார் எம்.எல்.ஏ.


No comments: